சென்னை,
திலீபனை தமிழர்களின் நினைவிலிருந்து அகற்ற முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற நிலையில், அவரது நினைவிடத்தில் நிறுவப்பட்டிருந்த திருவுருவச் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய திலீபன், தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உணவும் நீரும் அருந்தாமல் 12 நாட்கள் போராடி, செப்டம்பர் 26ஆம் தேதி தனது உயிரைத் தியாகம் செய்தார். அவரது போராட்டம், 1987 இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னணியில் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடனும் தொடர்புடையதாகும்.
தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழ் ஈழத்தில், தங்களது வரலாற்றுத் தியாகியை நினைவுகூர்வதற்குக்கூட தடைகளும் கட்டுப்பாடுகளும் தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்ற நிலையில், அவரது சொந்த மண்ணில் நினைவுச் சின்னமே அகற்றப்படுவது, ஈழத் தமிழர்களின் நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. தமிழர்களின் வரலாற்றையும் தியாகங்களையும் அழிக்கும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலைச் சிதைக்கும் இந்த நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம். உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழர்களும் இந்த நடவடிக்கைக்கு ஒருசேரக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு உரிய கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
திலீபன், இந்திய அரசை நோக்கி தனது உயிரைப் பணயம் வைத்து போராடிய வரலாற்றுப் பின்னணியையும், 1987 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய ஒன்றிய அரசு இச்சம்பவத்தை மௌனமாகக் கடந்து செல்லாமல், இலங்கை அரசாங்கத்திடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதாக இந்திய அரசின் செயல்பாடு அமைய வேண்டும். மேலும், இலங்கை அரசு இச்சம்பவத்திற்கான வெளிப்படையான விளக்கத்தை அளித்து, தமிழர்களின் அமைதியான நினைவேந்தல் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
நினைவுச் சின்னத்தை அகற்றலாம். தமிழர்களின் நினைவிலிருந்து தியாகதீபம் திலீபனை அகற்ற முடியாது. தமிழர்களின் உரிமைக்காகத் தனது இன்னுயிரை ஈந்த தியாகதீபம் திலீபனின் தியாகத்தை உலகத் தமிழர்கள் என்றும் நினைவில் கொண்டிருப்பார்கள். தமிழர்களின் நினைவேந்தல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகள் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.