சென்னை,
பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா(வயது 76) இன்று காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்த் திரையுலகின் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த ‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவாவின் மறைவு மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது மறைவால் இசையுலகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது.
தனது தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனங்களில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற பாடல்களாலும் தமிழ் இசை உலகில் அழியாத தடம் பதித்தவர் தேவா. அவரது இசை, தலைமுறைகள் பல கடந்தும் நம் நினைவுகளிலும் இதயங்களிலும் உயிர்ப்புடன் வாழும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.