தமிழக செய்திகள்

“வாக்களித்த மக்களின் நம்பிக்கையை புதிய அரசு இழந்து வருகிறது” - உதயநிதி ஸ்டாலின்

தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தையும் மூடும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். கதவுகள் மூடப்பட்டதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது. இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயந்தி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிட்டுப்பதாவது;-

தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.

தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.

மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.