தமிழக செய்திகள்

ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி பதவி ஏற்பு

ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக, ஐகோர்ட்டு மதுரை கிளையில் பணியாற்றியவர் பி.புகழேந்தி. இவரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது.

இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, பி.புகழேந்தியை, ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பி.புகழேந்தி நேற்று காலையில் பதவி ஏற்றார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், புதிய நீதிபதி புகழேந்தியை வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் செயலாளர் கமலநாதன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி உள்பட பலர் வரவேற்று பேசினர்.

இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதி பி.புகழேந்தி பேசினார். அவர், நான் வழக்கு தாக்கல் செய்யும்போது மேற்கொள்ளும் நடைமுறையை எனது சீனியர் வக்கீலும், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியுமான எஸ்.ராஜேஸ்வரன் பாராட்டுவார். ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு என் பெயரை பரிந்துரை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.பானுமதி, சஞ்சய்கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நீதிபதி புகழேந்தி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு நீதிபதிகள், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அரவிந்த்பாண்டியன், நர்மதா சம்பத், எஸ்.டி.எஸ்.மூர்த்தி, அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், புதிய நீதிபதி புகழேந்தியின் குடும்ப நண்பரான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வக்கீலும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ். இன்பதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. அதில் தலைமை நீதிபதி உள்பட 59 நீதிபதிகள் உள்ளனர். தற்போது நீதிபதி பி.புகழேந்தி பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 15 ஆக உள்ளது.