சென்னை,
பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் வாங்கிய மாதாந்திர பயணச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்த விவரங்கள் சில நாட்களில் அழிந்துவிட்டதால், கல்லூரி மாணவிக்கு டிக்கெட் பரிசோதகர் ரூ.510 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ரெயில்வேயின் பயணச்சீட்டு அச்சிடும் முறையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பட்டாபிராம் உழைப்பாளர் நகரைச் சேர்ந்த வினோத் கிறிஸ்டோபரின் மகள், சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் வழக்கம்போல் மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கியபோது டிக்கெட் பரிசோதகர்கள் மாதாந்திர பயணச்சீட்டை சோதனை செய்தனர்.
அப்போது, பயணச்சீட்டில் எண்ணைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் அழிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவி விளக்கம் அளித்தும், அதனை ஏற்காத டிக்கெட் பரிசோதகர்கள் ரூ.510 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
திடீர் நடவடிக்கையால் பதற்றமடைந்த மாணவி, தனது தந்தை வினோத் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் ஜி-பே மூலம் அபராதத் தொகையை செலுத்தினார். இந்தச் சம்பவத்தால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வினோத் கிறிஸ்டோபர் பட்டாபிராம் ரெயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும், புகார் புத்தகத்தை கேட்டபோது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் அனுப்பி அலைக்கழித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில், மேலும் சில பயணிகளும் தங்களது மாதாந்திர பயணச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட தகவல்கள் அழிந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர். செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்தும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
ரெயில்வே நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும் தெர்மல் காகிதங்களில் அச்சிடப்படும் பயணச்சீட்டுகளின் எழுத்துகள் சில நாட்களிலேயே அழிந்துவிடுவதாகவும், அச்சு இயந்திரங்களின் பராமரிப்பு குறைபாடுகள் அல்லது கார்பன் ரிப்பன் தொடர்பான சிக்கல்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பயணிகளின் தவறு இல்லாத நிலையில் அபராதம் விதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், பயணச்சீட்டு அச்சிடும் முறையில் உள்ள குறைபாடுகளை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.