சென்னை,
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விமலா விசாரித்தார். பின்னர் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன், ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தார்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் விமலா கடந்த ஜூன் 17-ந்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு இன்ஸ்பெக்டர் விமலா இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுதிர்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.அய்யாதுரை ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கவுதமன் ஆஜராகி, ‘‘மனுதாரர் இன்ஸ்பெக்டர் விமலா பணியிடை நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டது. அதனால், இந்த வழக்கை முடித்து வைக்கவேண்டும்'' என்று கூறி, பணியிடை நீக்கத்தை திரும்ப பெற்ற உத்தரவை தாக்கல் செய்தார். இதை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.