சென்னை,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது” என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி, தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களைப் போல், கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல. ஜார்க்கண்ட், கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அரசு இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.