சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அன்னை மொழிக்கு ஏற்பளிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து உயிர்த்தியாகம் செய்த தீரர்களை போற்றும் வகையிலும், தாய்மொழியை பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் வகையிலும் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21-ஆம் நாளான நாளை கொண்டாடப்படும் நிலையில், அன்னைத் தமிழை வணங்கும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அளவில் கடைபிடிக்கப்படும் அல்லது கொண்டாடப்படும் ஒவ்வொரு நாளுக்கு பின்னும் ஒரு வரலாறு இருப்பதைப் போன்று உலகத் தாய்மொழி நாளுக்கும் பெரும் தியாக வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, இன்றைய வங்க தேசமான கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.
அதைக் கண்டித்தும், வங்க மொழியை ஏற்பளிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அப்துஸ் சலாம், அபுல் பர்கட், ரபீக் உத்தின் அகமது, அப்துல் ஜப்பார், ஷபியுர் ரஹ்மான் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் வகையிலும், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அப்போது தொடங்கி உலக அளவில் 27-ஆம் ஆண்டாக இந்த நாள் கொண்டாப்படுகிறது.
உண்மையில் உலகத் தாய்மொழி நாளாக கொண்டாப்படும் தகுதியும், தியாகமும் மொழிப்போர் தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும் ஜனவரி 25-ஆம் நாளுக்குத் தான் உண்டு. வங்கமொழிக்கு ஏற்பளிப்பு பெறுவதற்காக டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியப் போராட்டங்களை விட, அன்னைத் தமிழைக் காப்பதற்காகவும், இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்காகவும் தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்தியப் போராட்டம் மிகவும் நீண்டது; அவர்கள் செய்த தியாகமும் அளப்பரியது ஆகும். வங்க மொழிக்காக டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியப் போராட்டம் 1948ஆம் ஆண்டில் தொடங்கி, 1956ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கு மட்டுமே நீண்டது. இந்த மொழி காக்கும் போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை 5 மட்டுமே.
ஆனால், இந்தித் திணிப்புப் போராட்டம் 1937ஆம் ஆண்டில் தொடங்கி 1968ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் நீடித்தது. தாளமுத்து , நடராஜன் ஆகியோரில் தொடங்கி கீழப்பழுவூர் சின்னசாமி, விருகம்பாக்கம் அரங்க நாதன் மற்றும் பெயர் தெரியாதவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். உண்மையில் மாணவர்கள் செய்த தியாகத்தை தங்களின் தியாகமாக காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக, அது குறித்து யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகளில் வலியுறுத்தி தமிழ் மாணவர்களின் மொழிப்போராட்டத்திற்கு உலக அளவிலான ஏற்பளிப்பைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால், வலிகளை அனுபவிக்காமல் பயன்களை மட்டுமே திருடும் திமுக அதைச் செய்யத் தவறிவிட்டது.
பா.ம.க.வின் அழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி 2006இல் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி 2015 & 16ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்க வில்லை. இதுதொடர்பான வழக்கும் சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனினும், அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து தமிழை கட்டாயப்பாடமாக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் என்று 1977ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தாதது, மாநகராட்சிப் பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியைத் திணித்தது, தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கத் தவறியது என அன்னைத் தமிழுக்கு திமுக அரசு இரண்டகம் மட்டுமே செய்தது.
சென்னை ஐகோர்ட்டு அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப்பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு மறந்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அன்னை தமிழுக்கு திமுக இழைத்த துரோகங்கள் பட்டியல் மிக நீண்டது.
தாயின் மனம் எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டது. அதனால், தமிழன்னை இந்த துரோகங்களை மன்னித்திருக்கலாம். ஆனால், தமிழுக்கு திமுக செய்த துரோகங்களை தமிழ்நாட்டில் இளைஞர்களும், மாணவர்களும் மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் வரும் தேர்தலில் திமுகவைத் தண்டித்தே தீருவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.