நயினார் நாகேந்திரன்  
தமிழக செய்திகள்

ஆண்டாண்டு கால தவத்தின் பலனாக, இன்று அருட்ஜோதியாய் பிரகாசிக்கும் திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண்- நயினார் நாகேந்திரன்

நேர்மையின் வழி நின்று நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

ஆண்டாண்டு கால தவத்தின் பலனாக, இன்று அருட்ஜோதியாய் பிரகாசிக்கும் திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

விவரிக்க வார்த்தைகளே இல்லை

‘முருகன் நல் போர் நெடுவேள் ஆவி’ என நமது சங்ககால இலக்கியமான அகநானூறு கொண்டாடும் போர்க்கடவுளான எம்பெருமான் முருகன், தனது கோவிலுக்கு சொந்தமான தார்மீக உரிமையை இன்று கம்பீரமாக நிலைநாட்டியுள்ளார்! உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான முருக பக்தர்களின் வாழ்நாள் கனவை கருணையோடு கனிந்தருளி, நனவாக்கியிருக்கிறார்! அவரவர் எல்லை என்ன, அவரவர் உரிமை என்ன, அவரவர் மத சுதந்திரம் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை இவ்வுலகிற்கு உணர்த்தியிருக்கிறார்! திருப்பரங்குன்ற தீபத்தூண் ஒளிரும் இந்த அற்புத தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!

நன்றிகள்

நான் உட்பட ஒட்டுமொத்த முருக பக்தர்களும் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என ஓயாமல் சட்ட போராட்டங்களை முன்னெடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், நேர்மையின் வழி நின்று நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்!

மத நல்லிணக்கம்

இனியாவது சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக 'மத நல்லிணக்கம்' என்ற பெயரில் தேவையற்ற உரிமை மீறல்களையும், மத மோதல்களையும் நிகழ்த்தாமல், பொது அமைதியை பாதுகாக்க பொறுப்புடன் செய்லபட வேண்டுமென தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்துகிறேன்!

அறியாமை நீங்க, அறமே ஓங்க அனைவருக்கும் அருள்புரிவாய் ஆறுமுகனே! ஓம் சரவண பவ!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT