சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்து தவெகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் கவர்னர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்த நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; கவர்னர் மாளிகை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கவர்னரின் கடமை என்ன? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு.
அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; கவர்னர் மாளிகை அல்ல. இது தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: 1994 (3) SCC 1
இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.