தமிழக செய்திகள்

காவல்துறை நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

சென்னை,

செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர் தற்கொலை செய்துள்ளார். காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தேனி மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன், இவர் மதுரை அவுனியாபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கூரியர் நிறுவனத்தில் ஒப்பந்த பொருள் போக்குவரத்து வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 03.11.2026 ஆம் தேதி அன்று ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, வாகனத்தில் தேவாரத்தில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, வாலந்தூர் சுடுகாடு அருகில் வாகனம் தீவிபத்துக்கு ஆளாகி, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டன.

காவல் நிலையத்தில் தற்கொலை

இது தொடர்பாக காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் ஓட்டுநர் ஆர்.பாலகிருஷ்ணன் தகவல் கொடுத்துள்ளார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன், விசாரணைக்காக கடந்த 13-ஆம் தேதி இரவு செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன், காவல் நிலையக் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது தமிழகத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

கொடூர மரணங்கள்

அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்கள் மீது ஆத்திரம் காட்டுவதால், காவல் நிலையங்களில் கொடூர மரணங்கள் நிகழ்கிறதோ என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. விசாரணக்கு அழைத்துச் செல்பவர்களிடம் காவல் துறையினர் எப்படி நடந்த கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பல தீர்ப்புகளில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையிலும், ஏன், தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளும் கூட மனித உரிமைகளை பெற்றவர்கள் என நினைவூட்டி அறிவுறுத்தியுள்ளது.

காவல் மரணங்கள் அதிகரிப்புக்கு காரணம்

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் மீது காவல் துறை எந்தவித அக்கறையும் காட்டாது, அவைகளை நிராகரித்து, அதிகார அத்துமீறலையே தனது கடமையாகக் கருதி செயல்படுவதும், குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் , காவல்துறையில் சிலர் இணைந்து அச்சாக செயல்படுவதும் தான் காவல் மரணங்கள் அதிகரிப்புக்கு காரணம் என்பதை பல களஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன.

சாத்தான்குளம் காவல்துறையின் கொலை வெறித் தாக்குதலில் தந்தை - மகன் இருவரும் மரணம், சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், ஆகாஷ் டெலிசன் மர்ம மரணத்திலும் காவல் துறையினர் தொடர்பு என தொடரும் சம்பவங்கள் காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரமைக்க வேண்டிய உச்சமட்ட சீரழிவுக்கு ஆளாகி நிற்பதை உணர்த்துகிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக் காட்டுகிறது.

உயர் மட்டக்குழு

இது தொடர்பாக, பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமைகள் தொடர்பான ஆய்வாளர்கள், புலனாய்வுத்துறை நிபுணர்கள், உள்ளடங்கிய உயர் மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்து, பரிந்துரைகள் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது.

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஆர்.பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது? அது தற்கொலை தானா? இதில் தொடர்புடைய உயர் அலுவலர்கள் உட்பட காவலர்களின் செயல்பாடுகள் சட்டமுறைகளுக்கு உட்பட்டிருந்ததா? என எல்லாக் கோணங்களிலும் விரிவான, நீதி விசாரணை செய்திட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மரணமடைந்த ஆர். பாலகிருஷ்ணன் குடும்பத்தின் மறு வாழ்வை உறுதி செய்யும் முறையில் அரசு உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT