சென்னை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
புதுக்கோட்டை அருகே வாய் பேச முடியாத பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை, காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, சாலையில் தள்ளிவிட்டு சென்றுள்ளதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.
வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமை, ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெட்கி தலைகுனிய வேண்டிய பெரும் அவலமாகும். மன்னிக்கவே முடியாத இந்த பெருங்குற்றத்தில் ஈடுபட்ட மனித மிருகங்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்தி மரண தண்டனை வழங்க வேண்டும்.கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. அதனால்தான் திமுக அரசைத் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். இப்போது ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.
ஆட்சிக்கு வந்த உடனேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். தமிழகத்தில் சில நாட்களாக நடக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவங்களை பார்க்கும் போது இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்றவை, வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான், தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, மாற்றத்திற்கான அரசு அல்ல, திமுக அரசின் தொடர்ச்சி என்பதை கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. டாஸ்மாக் மது கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது ஜோசப் விஜய் ஆட்சியிலும் தொடர்கிறது.
மணல் உள்ளிட்ட கனிம வளகொள்ளையும் நிற்கவில்லை. காவல்துறையும் வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு கைகட்டி சேவகம் செய்கிறது.எனவே, காவல்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், பெண்களால் ஆட்சிக்கு வந்த ஜோசப் விஜய், பெண்களாலேயே வீழ்த்தப்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.