தமிழக செய்திகள்

பெங்களூருக்கு தப்பி சென்ற கைதி; தேடிப்பிடித்து கைது செய்த போலீசார்

சில நாட்களுக்கு முன்பு கைதி ஒருவர் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தபோது போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடினார்.

சென்னை,

தப்பியோடிய கைதி மீண்டும் போலீசாரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டார்.

கைதி

திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 34). இவர் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS) கீழ் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

தப்பி ஓட்டம்

அவர் காவலில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் சிறையில் இருந்த போது அவருக்கு கடுமையான நெஞ்சுவலி வந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு அவர் அனுப்பப்பட்டார். சிகிச்சைக்காக செல்லும் போது காவலர்களிடமிருந்து நைசாக நழுவி தப்பி ஓடிவிட்டார்.

கைது

இதனைத் தொடர்ந்து வாஷர்மேன்பேட் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரைப் பிடிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மோகன்ராஜை பின்தொடர்ந்து தீவிரமாகத் தேடினார்கள். தேடுதல் வேட்டை முடிவில் பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்தனர். மோகன்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.