சென்னை
பிரதமரின் வார்த்தைகளில் ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் என்ற தகவலை படித்தவுடன் சிரித்து விட்டேன் என்று பெ. சண்முகம் பதிவிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜையும், நேற்று விஜயதசமியும் கொண்டாடப்பட்டது. இதில், விஜயதசமி பண்டிகையானது வடமாநிலங்களில் தசரா திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டங்களில் நேற்று பங்கேற்றார்.
அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த தசரா கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பூஜையிலும் ஈடுபட்டார். இதன்பின்பு, அந்த நிகழ்வில் பிரதமர் மோடி அம்பு விட்டதும் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி திருவிழா. உண்மை மற்றும் நேர்மையின் நீடித்த வலிமையை நமக்கு இது நினைவுப்படுத்துகின்றது என்று கூறினார். வேற்றுமையில் இருந்து விடுபட்ட, பாரபட்சமற்ற, நீதியை வழங்க கூடிய, ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய நிர்வாக நடைமுறையை கொண்டது ராமராஜ்ஜியம்.
அதில், அதிகாரத்துவம் ஆட்சி செலுத்துகிறது என்றில்லாமல், மக்கள் நலன் உறுதி செய்யப்படும் என்றார். அதனால், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வது என்பதே நம்முடைய உச்சபட்ச முன்னுரிமையாக உள்ளது என்றார். நாம் வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் ஆத்மநிர்பார் பாரதம் என்ற இலக்குகளை நம்முன் நிறுத்தி செயல்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டு உள்ள சமூக ஊடக பதிவில், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி - இப்படி கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படி பேசியுள்ளார்.
படித்தவுடன் சிரித்து விட்டேன். 'ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்' என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காக பிரதமரை பாராட்டுகிறேன் என தெரிவித்து உள்ளார்.