தமிழக செய்திகள்

‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது’ - கனிமொழி எம்.பி.

நீட் தேர்வில் மட்டும் முறைகேடு நடக்கவில்லை, நீட் தேர்வே முறைகேடுதான் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாகிய நாங்களே பல நாட்கள் தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சிகளில் இருக்கும் அத்தனை எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசுதான் மத்திய பா.ஜ.க. அரசு.

ஆனால் எங்களால் கூட செய்ய முடியாததை, மாணவர்கள் செய்துள்ளனர். டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களை பார்த்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசே முன்வந்துள்ளது. இது மாணவர்களின் மிகப்பெரிய வெற்றி.

நீட் தேர்வுக்கு எதிராக வந்த முதல் குரல், தமிழ்நாட்டில் இருந்து வந்ததுதான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மட்டும் முறைகேடு நடக்கவில்லை, நீட் தேர்வே முறைகேடுதான்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.