சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது.
இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், கவர்னர் அர்லேகரை சந் தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் கவர்னர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல். ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதி னார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இதனிடையே, 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. தலா 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட்(சிபிஐ) மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் (ஐயுஎம்எல்) ஆதரவை பெற தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் ஆகிய 4 கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுவை சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதனிடையே, அதிமுக ஆதரவு கேட்டதாகவும், அதுபற்றி மு.க. ஸ்டாலின் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த நிலையில், கவர்னர் ஆர்.வி. ஆர்லேகரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இன்று நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், சென்னையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.