நீலகிரி,
நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-
“கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்பைப் பெறுவது மட்டுமே என்று நினைக்கக் கூடாது. மாறாக, கல்வி என்பது சமூகம் மற்றும் தேசத்தின் மீதான தங்களின் பொறுப்புகளைப் பற்றி சிந்திக்க மாணவர்களைத் தூண்ட வேண்டும்.
மாணவர்கள் தங்கள் கல்வியை பயன்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் நல்வாழ்விற்கும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு ஒரு முக்கிய இலக்காக இருந்தாலும், மாணவர்கள் தங்கள் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், தலைவர்களாகவும் ஆக வேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்க வேண்டும்.
மனிதநேயத்தை வளர்ப்பதிலும், தனிநபர்களை பொறுப்புள்ள மற்றும் இரக்கமுள்ள குடிமக்களாக உருவாக்குவதிலும்தான் கல்வியின் உண்மையான சாராம்சம் அடங்கியுள்ளது. நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் வலுவான தேசபக்தி உணர்வு கொண்ட, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் தன்னலமின்றி பங்களிக்கக்கூடிய தனிநபர்களை உருவாக்குவதே கல்வியின் மிக உயர்ந்த நோக்கம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.