கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு மருத்துவமனைகளின் தரத்தினை ஆராய்ந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன்

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக செவிலியர் மாணவி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஏழை எளிய மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைகள் உயிர் பறிக்கும் எமன்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை தவெக அரசு இத்தனை அலட்சியத்துடன் கையாள்வது ஏன் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சீரழிந்த சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பொருளாதாரம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல், எந்த ரவுடிக்கு எந்த பதவி கொடுக்கலாம் என்று முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசித்துக் கொண்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை எப்படி தடுக்க முடியும்?

மாற்றம் என்று கூறி மக்களை நம்ப வைத்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டிருக்கிறது. இனியாவது தங்கள் ஆட்சியின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தினை ஆராய்ந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஏழை மக்களின் உயிர்களைப் பாதுகாக்க தவெக அரசு முன்வர வேண்டும்.

அதுமட்டுமன்றி ஆளும் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.