சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா? ஏனெனில் இது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இவ்வளவு அதிகமான வழக்குகள் பதிவாகியும், அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை.
குழந்தைகளை துன்புறுத்தும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்திருக்கும் நிலையிலும், நடப்பவை குறித்து அரசுக்கு எந்தவிதக் கவலையோ அல்லது அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு விஷயம் சரியாக செயல்படாதபோது, அதன் விவரங்கள் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. பலனளிக்காத ஒன்றைப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்?
மேலும், அவர்களுமே கூட எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர்களுக்குப் போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மக்களை பாதுகாக்க வேண்டியவர்களுக்கு, முதலில் அதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னால், அரசு தான் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.