தமிழக செய்திகள்

ராகுல் - பிரியங்கா ஆகியோரின் உறுதிமிக்க போர்க்குணம் நம்பிக்கையளிக்கிறது! - திருமாவளவன்

இந்த அறப்போர் ஈவிஎம்'ஐ தூக்கி எறிவதற்காக வெகுமக்கள் புரட்சியாக வெடித்தெழ வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

இந்த அறப்போர் ஞானேஷ்குமாரின் பதவி விலகலுக்கானதாக மட்டுமே அமைந்துவிடாமல், மோடி அரசை அப்புறப்படுத்துவதற்கும்; ஈவிஎம் என்கிற வாக்குப்பதிவு எந்திரத்தைத் தூக்கி எறிவதற்குமான வெகுமக்கள் புரட்சியாகப் பரிணாமம் பெற்று வெடித்தெழ வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

ராகுல்-பிரியங்கா கைது

இது தொடர்பாக, விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி விலக வலியுறுத்தி புது டெல்லியில் அக் -06 இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடி முற்பகல் 11.00 மணியளவில் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகப் புறப்பட்டோம். 'ஆகாஷ்வாணி பவன்' அருகே தடுத்து நிறுத்தப் பட்டோம். அதே இடத்தில் போராடினோம். பின்னர் வலுக்கட்டாயமாக அனைவரையும் கைதுசெய்து அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் தொடர்ந்து அங்கேயே தரையில் அமர்ந்து போராடிய ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை இரவு கைது செய்து 10.00மணிக்கு மேல் விடுவித்தனர்.

இரண்டாவது நாளாக அக்- 07 அன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ராகுல்காந்தி , மல்லிகார்ஜூன் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டோம்.

ஜன்பத் சாலையில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் மதிய உணவுக்காக 1.30 மணியளவில் ஒன்று கூடினோம். ராகுல்காந்தி, பிரியங்கா, கார்கே மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம். அங்கேதான், 'உணவுக்குப் பின்னர் என்ன செய்யலாம்' என்று கலந்தாய்வு செய்யப்பட்டது. ராகுல் எங்களிடம் கருத்து கேட்டார்.

ஜந்தர்மந்தர்குள்ளே நுழையவிடாமல் தடுப்பு

அவருக்கு எதிர் வரிசையில் மம்தா கட்சியைச் சார்ந்த டெரிக் ஓபரெய்ன், மனோஜ், இடதுசாரி உறுப்பினர்கள் பிரிட்டாஸ், சந்தோஷ் மற்றும் நான் ஆகியோர் அமர்ந்திருந்தோம். எங்களிடம் கருத்து கேட்ட ராகுல், பின்னர் முடிவைச் சொன்னார். 'சாப்பிட்டு முடிந்ததும் பேருந்தில் ஏறி ஜந்தர்மந்தர் செல்வோம்; அங்கே அமைதியான முறையில் நமது முழக்கங்களை எழுப்புவோம்'- என கூறினார்.

அவரோடு சுமார் ஒருமணி நேரம் அமர்ந்து பேசிக்கொண்டே உணவருந்தினோம். அதற்குள் அந்த உணவகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்களும் அங்கே குவிந்துவிட்டனர். வெளியே வந்ததும் ஊடகத்தினரைச் சந்தித்தோம். கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஊடகத்தினரிடம் கருத்துச் சொல்ல வேண்டுமென ராகுல் கேட்டுக் கொண்டார். அதன்படி நாங்கள் கருத்துக்கூறினோம்.

பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி ஜந்தர் மந்தர் கிளம்பினோம். ராகுல், கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் ஏறிக் கொண்டோம். ஜந்தர்மந்தர் பகுதியை நாங்கள் அடைந்ததும், அதற்கு சற்று முன்னதாகவே ஆயிரக்கணக்கிலே குவிக்கப்பட்டிருந்த காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் எங்களை ஜந்தர்மந்தர் தெருவுக்குள்ளே நுழையவிடாமல் தடுத்தனர்.

குண்டுகட்டாக வண்டிகளில் ஏற்றிய போலீசார்

எனவே, அங்கே திரண்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தரையில் அமர்ந்து போராடினர். அவர்களுடன் தரையில் அமர முயற்சித்த மற்ற உறுப்பினர்களையும் கட்சித் தொண்டர்களையும் அவ்வாறு அமரவிடாமல் விரட்டி விரட்டிப் பிடித்து ஒவ்வொருவரையும் குண்டுகட்டாகத் தூக்கி வண்டிகளில் ஏற்றினர். அதனால் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்குமென சிதறி ஓடினர். சிறிது நேரம் அங்கே பெரும் பதற்றமும் பரபரப்பும் உருவானது.

அவ்வளவு பரபரப்புக்கிடையிலும் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் சிறிதும் பதற்றமடையாமல் தம்மோடு அந்த இடத்திலிருந்த சில பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐம்பது பேருடன் போராடிக் கொண்டே இருந்தனர். அவர்களைச் சுற்றி மூன்று நான்கு வளையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சூழ்ந்து நின்று கொண்டனர். வேறு யாரும் அந்த குறிப்பிட்ட இடத்தை நெருங்கவிடாத வகையில் அரண் அமைத்து நின்றனர். அத்துடன், தரையில் அமர்ந்தவர்களையும் மல்லாந்து படுத்துக்கொண்டவர்களையும் கை கால்களைப் பிடித்துத் தூக்கிச் சென்று ஒவ்வொருவராக அப்புறப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர். அவ்வளவு கடுமையான நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து விடாப்பிடியாக எதிர்த்து நின்று போராடுவதில் ராகுலும் பிரியங்காவும் காட்டிய தீவிரமும் உறுதிப்பாடும் பெரும் வியப்பை அளித்தது. ஏதோ சில நிமிடங்கள் 'முழக்கமிட்டோம்; கலைந்தோம்' என்றில்லாமல், அவ்வளவு இலகுவாக கைது செய்வதற்கும் இடம் கொடுக்காமல் துளியளவும் உறுதிகுலையாமல் அவர்கள் போர்க்குரல் எழுப்பினர். பிரியங்கா தரையில் படுத்துக் கொண்டே முழக்கம் எழுப்பியவாறு இருந்தார். அவரைத் தூக்கிவிடாமல் தடுக்கும் வகையில் அவரைச் சுற்றிப் பெண்கள் பலரும் படுத்துக் கொண்டனர்.

ராகுலும் அவரை ஒட்டியே பாதுகாவல் அரண்போல தனது மெய்க்காவலர்களுடன் நின்று கொண்டார். பெண் காவலர்கள், துணை ராணுவப் பெண்கள் என ஏராளமானோர் ராகுலின் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய பெரும்பாடு பட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த இழுபறி நீடித்தது. முன்னும் பின்னும் அலையடிப்பது போல நடந்த தள்ளுமுள்ளு நெருக்கடிக்குள்ளே நானும் சில நண்பர்களும் சிக்கிக் கொண்டோம்.

சிலிர்த்துப் போனேன்

திடீரென பெருங்கூச்சல். ராகுலை துணை ராணுவத்தினர் கொத்தாக அள்ளித் தூக்கி காவல்துறையின் வண்டியில் ஏற்றினர். அதன்பின்னரும் பிரியங்கா தனது போராட்டத்தை நீட்டித்தார். அவரது கையில் 'இந்திய அரசமைப்புச் சட்டம்' இருந்தது. தனது நெஞ்சோடு அதனை அணைத்துப் பிடித்துக் கொண்டே அவர் போர் முழக்கம் எழுப்பினார். அந்தப் புத்தகத்தை பிரியங்கா கையிலே கொடுத்தவரே ராகுல் காந்தி தான். தமக்கையும் தம்பியும் களத்தில் கை கோர்த்து நின்ற அந்தக் காட்சியைக் கண்டபோது சில நொடிகள் நான் சிலிர்த்துப் போனேன்.

தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்தாக வேண்டும் என்கிற செய்தியை நாட்டுமக்களுக்கு அதன்மூலம் அவ்விருவரும் உணர்த்தினர்.

மோடி, அமித்ஷா, ஞானேஷ்குமார் ஆகியோரின் இந்தக் கூட்டுச்சதி வெறும் வாக்குத் திருட்டு மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பேரழிவைத் தரும் மாபெரும் மோசடி என்பதை இந்தப் போராட்டத்தில் அவர்கள் காட்டிய தீவிரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

வெகுமக்கள் புரட்சியாக வெடித்தெழ வேண்டும்

புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே இன்றைய மகத்தான சவால் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிற ராகுல்-பிரியங்கா ஆகியோரின் தளராத மன உறுதியையும்; சமரசமற்ற போர்க்குணத்தையும்; உயிரையும் துச்சமென கருதிக் களமாடும் துணிவையும்; மதசார்பின்மை உள்ளிட்ட தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை -கோட்பாடுகள் மீது கொண்டுள்ள தீவிரப் பிடிப்பையும்; எடுத்த நிலைப்பாட்டில் காட்டும் முழுமையான ஈடுபாட்டையும் -அர்ப்பணிப்பையும் கடந்த இரண்டு நாள்களாக நடைபெறும் போராட்டக் களத்தில் நேரில் காணமுடிந்தது.

பெருந்திரளிடையே எழும் பேரிரைச்சல், உடல் முழுதும் வெள்ளமென கொட்டும் வேர்வை, கட்டுங்கடங்காத கும்பலின் இடிபாடுகளாலும் துணை ராணுவத்தினரின் இழுபறிகளாலும் நேரும் உடலளவிலான வலிகள் -என எண்ணிலா இடர்களையும் பொறுத்துக் கொண்டு-சகித்துக் கொண்டு உண்மையான ஈடுபாட்டுடன் அவ்விருவரும் ஆற்றிய பங்களிப்பு அவர்கள் மீதான நம்பிக்கையை மென்மேலும் பெருகச் செய்துள்ளது.

சனாதன சங்கிகளின் சதிஅரசியலை வீழ்த்திட, இந்திய தேசத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்திட, இன்றைய நெருக்கடி மிகுந்த காலச்சூழலில் காங்கிரசோடு கை கோர்த்து நிற்பது தவிர்க்கமுடியாத வரலாற்றுத் தேவை என்பதை உணரமுடிந்தது.

இந்த அறப்போர் ஞானேஷ்குமாரின் பதவி விலகலுக்கானதாக மட்டுமே அமைந்துவிடாமல், மோடி அரசை அப்புறப்படுத்துவதற்கும்; ஈவிஎம் என்கிற வாக்குப்பதிவு எந்திரத்தைத் தூக்கி எறிவதற்குமான வெகுமக்கள் புரட்சியாகப் பரிணாமம் பெற்று வெடித்தெழ வேண்டும்.

வெல்க இந்தியா கூட்டணியின் அறப்போர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT