மதுரை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அயன்ரெட்டியபட்டியை சேர்ந்த கந்தசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
எங்கள் கிராமத்தில் உள்ள உலகநாயகியம்மன் மற்றும் முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 10 நாட்கள் சித்திரை திருவிழா நடக்கிறது. இந்த விழாவுக்கு எங்களிடம் வரி வசூலிக்கக்கூடாது என கிராமத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த கோவிலில் தரிசனம் செய்யவும் அனுமதிப்பதில்லை.
கிராம பொது கோவிலில் எந்தவித வேறுபாடும் இன்றி அனைவரும் தரிசனம் செய்யலாம் என அரசியலமைப்புச்சட்டம் கூறுகிறது. அதன்படி எங்கள் குடும்பத்தினரிடம் சித்திரை திருவிழாவுக்கான வரியை வசூலிக்கவும், கோவிலில் தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், கோவில் வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. இதில் யாரையும் ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. எனவே மனுதாரர் குடும்பத்தினரிடம் வரிவசூலித்து, தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.