தமிழக செய்திகள்

சென்னை ஆவடி விமானப்படை நிலையத்தில் 'சேகோன் மாரத்தான் 2026’ நடைபெற்றது

ஆவடி விமானப்படை நிலையத்தின் கமாண்டிங் அதிகாரியான ஏர் கமடோர் பிரதீப் சர்மா மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

சென்னை,

இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய விமானப்படையின் பரம் வீர் சக்ரா விருது பெற்ற ப்ளையிங் ஆபீசர் நிர்மல்ஜித் சிங் சேகோனின் வீரத்தையும், அவர் ஆற்றிய உயரிய தியாகத்தையும் போற்றும் வகையில், 'சேகோன் நினைவு மாரத்தான்-2026’-ன் இரண்டாம் பதிப்பு அக்டோபர் 4 அன்று இந்தியா முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, ஆவடி விமானப்படை நிலையம் 04 அக்டோபர் அன்று மூன்று பிரிவுகளில் மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ ஆகிய இந்தப் பிரிவுகளுக்கு, இந்திய விமானப்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களான 'தேஜஸ்' (Tejas), 'துருவ்' (Dhruv) மற்றும் 'பிரசந்த்' (Prachand) ஆகியவற்றின் பெயர்கள் முறையே சூட்டப்பட்டிருந்தன.

"ஓடு, உயரே பற, ஊக்கப்படுத்து" (Run, Soar and Inspire) என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, ஆவடி விமானப்படை நிலையத்தைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உட்பட மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

ஆவடி விமானப்படை நிலையத்தின் கமாண்டிங் அதிகாரியான ஏர் கமடோர் பிரதீப் சர்மா மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தார்; மேலும், அவரும் தனது விமானப்படை வீரர்களுடன் இணைந்து ஓட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT