மதுரை,
மதுரை கே.கே.நகரில் மாவட்ட கோர்ட்டு உள்ளது. இந்த வளாகத்தில் ரூ.166 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு கட்டிய கூடுதல் கட்டிடங்கள், மதுரை ஐகோர்ட்டில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டின் பண்பாடு ஆழமானது. அறிவாற்றலால் நாட்டின் பல துறைகளை இந்த மாநிலம் வளப்படுத்தி இருக்கிறது. சென்னை நகரில் பழமையான சட்டக்கல்லூரி கட்டிடத்தை புதுப்பித்தது பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சி ஆகும். மதுரை கோர்ட்டுகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டி இருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு நீதி கிடைப்பதில் சவுகரியம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதித்துறை நூற்றாண்டு பழமையான வரலாற்றை கொண்டது. மக்களிடம் சட்டத்தின் மீதான நம்பிக்கை அதிகம். நீதியை அணுகுதல் என்பது ஒரு மனிதநேய நடைமுறையாக இருக்க வேண்டும். சாதாரண குடிமகன் அணுக முடியாதபடி கோர்ட்டுகள் இருந்தால் உண்மையில் அது நீதியை மறுப்பதற்கு சமமானது.
எனவே மதுரை மாநகரின் மையப்பகுதியில் கோர்ட்டு கூடுதல் கட்டிடம் திறக்கப்படுவது முக்கியத்துவத்தை பெறுகிறது. ஒவ்வொரு புதிய கோர்ட்டு அறையும் வெறும் கட்டிட விரிவாக்கமல்ல. அது அரசின் நீதி வழங்கும் பொறுப்பை நிறைவேற்றும் திறனை அதிகரிக்கும் முயற்சியாகும். மாவட்ட நீதித்துறை, நாட்டின் நீதி நிர்வாக அமைப்பின் முதுகெலும்பாக விளங்குகிறது. பெரும்பாலான பொதுமக்கள் நீதிக்காக அணுகும் இடங்களாக மாவட்ட கோர்ட்டுகள் விளங்குகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு அதுதான் முதலும், கடைசியுமான கோர்ட்டு ஆகும். சட்டத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதில் மாவட்ட கோர்ட்டுகள் மகத்தான சேவை ஆற்றி வருகின்றன.
மதுரை ஐகோர்ட்டும், மாவட்ட நீதித்துறையும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும். நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வக்கீல்களின் தொழில்முறை திறனும் இணைந்தால் நீதியை முழுமையாக வழங்க முடியும். இந்திய நீதித்துறையின் பெருமையை உயர்த்தும் வகையில் எதிர்கால முயற்சிகளில் தொடர்ந்து நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையில் நடந்த இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்றனர். இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், "நீதித்துறை கட்டமைப்பு என்பது நிலையான ஒன்றாக இருக்கக்கூடாது. அது காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நீதித்துறையின் மரபுகள், ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை காக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும். அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை, நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அனைவரும் எளிதாக அணுகி விரைவான, குறைந்த செலவிலான நியாயமான நீதியை வழங்கும் அமைப்பை உருவாக்குவது நம் கடமை” என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி பேசியதாவது:
கண்ணகி கதை போல், இந்த மதுரை மண் என்பது, நீதியின் உயர்ந்த அடையாளமாக திகழ்கிறது. ஒரு சாதாரண குடிமகனின் கண்ணீர் கூட சக்திவாய்ந்த ஆட்சியையும் மாற்றக்கூடியது என்பதே அந்த கதையின் கருத்து. நீதி என்பது சலுகை அல்ல. அது கடமை. திருக்குறளில் கூறியபடி, தராசு போல எந்த சாய்வும் இன்றி நடுநிலையுடன் செயல்படுங்கள். அதுவே சிறந்த பண்பாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.