தமிழக செய்திகள்

சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் சொன்ன குட்டிக்கதை... எடப்பாடி கொடுத்த ரியாக்‌ஷன்

குட்டிக்கதை சொல்ல சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் விஜய் அனுமதி கேட்டார்.

சென்னை,

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

சட்டசபை நிறைவு நாளான இன்று முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசுகையில், திமுகவை கடுமையாக விமர்சித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது சட்டசபையில் பேசிய விஜய், ஒரு குட்டிக்கதை சொல்ல தோன்றுகிறது சொல்லலாமா? என சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர் அனுமதி கொடுத்தார்.

குட்டிக்கதை

அதன்படி, ”ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்று கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக்கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என கேட்டான். அதற்கு அந்த பெரியவர் ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் என சொன்னாங்க... அதான் தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என குட்டிக்கதையை முதல்-அமைச்சர் விஜய் முடித்தார்.

அப்போது சட்டசபையில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிரித்தனர்.

நக்கல், நையாண்டி

அதன்பிறகு முதல்-அமைச்சர் விஜய் கூறுகையில், “எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக, சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதை சொல்ல எங்களுக்கும் தெரியும். அந்த கதையில் பெரியவர் அப்படி சொன்னார். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதற்காக யாரும் டென்ஷனாக வேண்டாம்” என்று கூறினார்.