தமிழக செய்திகள்

அதிமுகவில் இருந்த கறை துடைக்கப்பட்டு விட்டது - காயத்ரி ரகுராம்

எங்கள் கொடியிலும் கட்சியிலும் ஒட்டியிருந்த அழுக்கு கறை இப்போது துடைக்கப்பட்டுவிட்டது என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைந்து கொண்டனர். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட் சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது.

இது குறித்து காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

மாற்றத்தை வாக்குறுதி அளித்த #தவெக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்வது தவறான செய்தியை மக்களுக்கு அளிக்கிறது. #தவெக-வை நம்பிய உழைக்கும் நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன; அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய பின்னணி கொண்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மக்கள் எதிர்பார்த்த தூய்மையான அரசியல் இது அல்ல. #தவெக உண்மையாகவே நேர்மையையும் ஊழலற்ற அரசியலையும் நம்பினால், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்து வந்தாலும்—#திமுக, #அதிமுகஅல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும்—அதே ஒழுக்கத் தரத்தை அனைவரிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.

#தவெக உண்மையில் மாற்றத்திற்கான கட்சியாக இருந்திருந்தால், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் #திமுக மற்றும் #அதிமுக அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டியவர்கள்; #தவெகவின் பிரமாண்ட இணைப்பு விழா மேடையில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

உதாரணமாக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்தொடர்பாக, குட்கா வழக்கில் வழக்குத் தொடர 2023 நவம்பர் 13 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிசிபிஐக்கு அனுமதி வழங்கினார். சுமார் ரூ.39.91 கோடிலஞ்சப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டதாகவும், இந்த அனுமதி உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுகின்றன. இத்தகைய சூழலில், இவ்வாறான அரசியல்வாதிகளை கட்சியின் மேடையில் வரவேற்பது, மக்கள் எதிர்பார்த்த மாற்ற அரசியலுடன் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட முடிவுகள் தொடர்ந்தால், மக்கள் #தவெக-யை ஒரு மாற்றுக் கட்சியாக அல்ல, மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே பார்க்கத் தொடங்குவார்கள்.

எங்கள் கொடியிலும் கட்சியிலும் ஒட்டியிருந்த அழுக்கு கறை இப்போது துடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதே அழுக்கு கறைகள் தற்போது #தவெக கொடியிலும் அதன் கட்சியிலும் ஒட்டத் தொடங்கியுள்ளது போல தெரிகிறது.

#அதிமுக தற்போது தன்னை சுத்திகரித்து திருத்திக் கொண்டிருக்கும் நிலையில், #தவெகஅதற்கு மாறாக, முன்பு எதிர்த்த அதே பிரச்சினைகளுடன் தொடர்புபடத் தொடங்கியுள்ளது. வெட்கக்கேடு என அதில் பதிவிட்டுள்ளார்.