மதுரை,
திருப்பரங்குன்றத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் பேசியதாவது:-
பிடித்த தலைவர்களுக்கு ஓட்டு போடுவதற்கான தேர்தல் இல்லைங்க.. ஆட்சி மாற்றத்திற்கு ஓட்டு போடுவதற்கான நேரம். காரைக்குடியில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த ரோட் ஷோவை பார்த்தேன். அரசியல் என்பது ஒரு வண்டி மேல உட்கார்ந்து கை காட்டுவது இல்லை. இளைஞர்களே உங்களுக்காகத்தான் பேசுகிறேன் அரசாட்சி தெரியாது, அரசு எப்படி செயல்படும் என்பது தெரியாது. இதுவரை அரசியலில் இருந்தவர்கள் கிடையாது. உள்ளாட்சி கவுன்சிலராக கூட பணி செய்தது கிடையாது. அவங்களை வைத்து அரசமைத்து யாருக்கு என்ன செய்யப் போகிறோம்.
மத கலவரத்தை மாநில அரசு வேண்டுமென்றே உருவாக்கியது. தமிழகத்தின் கண் திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இங்கு வரலாற்று வெற்றி கிடைக்க போகிறது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காவிட்டாலும் மக்கள் கொடுக்கும் தீர்ப்பை திமுக ஏற்க வேண்டும். நாம் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. காவல் துறையை ஏவல் துறையாக மாற்றினார்கள்.
தமிழகத்தில் எல்லா மதங்களும் வழிபாடு செய்ய விரும்புகிறோம். இஸ்லாமியர்களுடன் அண்ணன், தம்பியாக உள்ளோம். தீபத்தூண் இல்லை. சர்வே கல் என பொய் சொன்னார்கள்.
திமுக வேட்பாளர் கிருத்திகா மீது திருட்டு, மிரட்டல் வழக்குகள் உள்ளன. அவரை நிராகரித்திருக்க வேண்டும். ரூ.1,000 கோடியில் முடிய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.600 கோடி கூடுதலாக செல்ல மாநில அரசே காரணம். அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும். இரட்டை இலை வெற்றி இலையாக மாறும்.
தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்களார்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது.
இவ்வாறு அவர் கூறினார்.