தமிழக செய்திகள்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வால் விழி பிதுங்கும் அரசு போக்குவரத்து கழகம்

பஸ்கள் இயக்க வருமானத்தில் 90 சதவீதம் பெட்ரோல், டீசலுக்கு செலவிடப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இன்று (புதன்கிழமை) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கார் உள்ளிட்ட வாக னங்களில் செல்பவர்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் டவுன் மற்றும் வெளியூர் பஸ்களும் இந்த சுங்க கட்டண உயர்வால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மண்டலத்தை பொறுத்தமட்டில், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதாவது, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டவுன் மற்றும் வெளியூர் பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதில் டவுன் பஸ்கள் மட்டும் 1,200 உள்ளன. இந்த பஸ்கள் தினமும் சுமார் 37 சுங்கச்சாவடிகளை கடந்து செல்கின்றன. அதாவது தமிழகத்தில் உள்ள 72 சுங்கச்சாவடிகளில் 37 சுங்கச்சாவடிகளை மதுரை மண்டல அரசு பஸ்கள் தினமும் கடந்து செல்கின்றன.

மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில், கப்பலூர், பாரபத்தி, கத்தப்பட்டி, கொடைரோடு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை வெளியூர் பஸ்களைவிட டவுன் பஸ்கள் அதிகளவு கடந்து செல்கின்றன. இதில், கப்பலூர் சுங்கச்சாவடியை மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் கடக்கின்றன. இதில் 20 பஸ்கள் மகளிர் இலவச பயணத்துக்கான பஸ்களாகும்.

அதன்படி, ஒரு நாளைக்கு கப்பலூர் சுங்கச்சாவடியை மட்டும் சுமார் 1,108 முறை பஸ்கள் கடந்து செல்கின்றன. இவற்றுக்கு ஒருமுறை கட்டணமாக ரூ.175 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.180 வசூலிக்கப்பட உள்ளது.

ஒரு தடவை மதுரையில் இருந்து திருமங்கலத்துக்கு பஸ் இயக்கப்பட்டால் ரூ.8,500 வருமானமாக கிடைக்கும். அதில் ரூ.1,200 சுங்கக்கட்டணமாக செலுத்த வேண்டும். இது தவிர பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் போது, சுங்கக்கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும். மதுரை மண்டலத்தில் சுங்கக்கட்டணமாக மட்டும் ரூ.3 கோடி வரை செலவிடப்படுகிறது. இதில் கப்பலூர் சுங்கச் சாவடியில் மட்டும் ரூ.1 கோடி கட்டணமாக செலுத்தப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், போக்குவரத்து கழகம் தொடர்ந்து பஸ்களை இயக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து மதுரை மண்டல உயர் அதிகாரிகள் கூறும்போது, பஸ்கள் இயக்க வருமானத்தில் 90 சதவீதம் பெட்ரோல், டீசலுக்கு செலவிடப்படுகிறது. அடுத்தபடியாக, பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு பெருந்தொகை செலவாகிறது.

தற்போது சுங்கக்கட்டணம் சுமையாக வந்துள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை. சுமார் 2% கி.மீ. தூர 4 வழிச்சாலையில் சர்வீஸ் ரோட்டை மட்டும் பயன்படுத்தி வரும் டவுண் பஸ்களுக்கு ஒவ்வொரு முறையும் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஆண்டுதோறும் கட்டண உயர்வு செய்யப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பொதுப்போக்குவரத்து சவாலாக அமைந்துவிடும். எனவே, சுங்கச்சாவடிகளில் அரசு டவுன் பஸ்களுக்கு கட்டண விலக்கு அல்லது கட்டண சலுகை வழங்க வேண்டும் என்றனர்.