தமிழக செய்திகள்

சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயர்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - மதுரை மேயர்

திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

மதுரை,

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

உடல் தகனம்

இந்த நிலையில், மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்

இந்நிலையில் மதுரையில் பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துவிட்டு மதுரை மாநகராட்சியின் மேயர்(பொறுப்பு) நாகராஜன் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சாலமன் பாப்பையா வசித்த தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT