சென்னை,
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
“மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் 2026–2027-ஆம் கல்வியாண்டில் மருத்துவம் – இளநிலை (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் – இளநிலை (பிடிஎஸ்) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,432 மையங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், அந்தத் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடக்கும் முன்பே ராஜஸ்தானில் கசிந்து விட்டதாகப் புகார் எழுந்து, அதை விசாரித்த சி.பி.ஐ., வினாத்தாள் கசிந்ததை உறுதி செய்ததையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. மீண்டும் ஒரு தேர்வு (மறு தேர்வு) ஜூன் 21 அன்று நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த ‘நீட்’ தேர்வு அல்ல; ஒட்டு மொத்தமாகவே ‘நீட் தேர்வு’ ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது. இந்த குரலை அழுத்தமாக, உரக்க எழுப்ப வேண்டிய கால கட்டம் இது! இதை வலியுறுத்தி இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒத்த கருத்துடையோர்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று (16.5.2026) காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
நீட் ஒரு நீண்ட கால நோய். தமிழ்நாட்டினுடைய கல்வியை மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்கள் உள்பட, அதாவது உயர்ஜாதிக்காரர்கள் மட்டுமே பயன்படக் கூடிய, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு கல்வி முறை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றுதான், நீட் தேர்வாகும்.
மருத்துவக் கல்வியில், தொழிற் கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அது இந்தியாவிலேயே வியப்படைக்கூடிய மாநிலமாக இருக்கிறது. திராவிடம் அதனைச் செய்து வருகிறது; ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்னும் வேகமாக அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதையெல்லாம் கண்டு, பொறுக்க முடியாதவர்கள்.
தந்தை பெரியார் மண்ணிலே மனுதர்மத்திற்கு இடமில்லை; இங்குக் குலதர்மக் கல்வியை இடம்பெறாமல் தடுத்த மண், இந்த மண் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் என்ற ஒரு கண்ணி வெடியைப் புதைத்து, நம்முடைய இளம் பிள்ளைகளுடைய கனவுகளையெல்லாம் தகர்த்து வரக்கூடியதை எதிர்த்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல, இதுதான் சரித்திரத்தில் திருப்பு மய்யமும்கூட. தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது. அது 1952 இல், வகுப்புவாரி உரிமை என்பதை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்த பிறகும்கூட, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா போன்றவர்களும், தனித்து திராவிட இயக்கம்தான் நின்று, இந்தியாவிலே, அதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்குப் பரவலான பலன் கிடைத்தது. இவ்வார்ப்பாட்டம் சென்னை தலைநகரிலே மட்டும் நடைபெறவில்லை தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ஒலி முழக்கங்கள் எழுப்பட்டன. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி வரவேற்புரையாற்றினார்.
தொடக்க உரை
ஆர்ப்பாட்டத்தின் தொடக்க உரையை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார்.
கண்டன உரை
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றியதை தொடர்ந்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் ச.இராஜசேகரன், கவிஞர் கண்மதியன் மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ., பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கொடியுடன் ‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி எழுச்சி முழக்கமிட்டு பங்கேற்று சிறப்பித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியுள்ள ‘‘நீட்’’ தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக்கண்ணா?’’ என்ற புதிய புத்தகம் ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.