கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும் - ராமதாஸ்

தூர்வாரும் பணியை காலதாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், குளங்கள், தடுப்பணைகள், ஆறுகள், காவிரி டெல்டா மாவட்ட பாசன வாய்க்கால்கள் இப்போதே ஈரப்பதம் இன்றி வறண்டு விடும் நிலை ஏற்பட்டு விட்டது. ஜூன் மாதம் திறக்கப்படும் மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை வரை செல்ல வேண்டும் என்றால் இம்மாதமே தூர்வாரும் பணிகளை துவக்கிட வேண்டும்.

தூர்வாருவது தள்ளிப்போனால் நடப்பாண்டு சாகுபடி நிலைமை மோசமாகும். காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28-ம் தேதி அணை மூடப்படுவது வழக்கம். இப்போது மேட்டூர் அணையில் 90.89 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் டெல்டாவில் ஏ - வாய்க்கால் முதல் டி - வாய்க்கால்கள் வரை அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளன. தூர்ந்து போகும் வாய்க்கால்கள், வடிகால்கள் பொதுப் பணித்துறை சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தூர்வாரும் பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல், வேளாண் பொறியியல் துறையை கொண்டே செய்ய வேண்டும். அப்போதுதான் பணிகளில் தரம் இருக்கும். வடிகால் வாய்க்கால்களை வருவாய்த்துறையின் பதிவேட்டின்படி சர்வே செய்து பணிகள் தொடங்க வேண்டும். இதற்காக அந்தந்த பகுதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

Also read:மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

வாய்க்கால்களில் தண்ணீர் நின்ற பின்னர் எந்தெந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் கணக்கெடுத்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைப்பதும், அதன்பின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டதொடரிலோ அல்லது தனி அறிவிப்பாகவோ அரசு காவிரி டெல்டாவில் தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பது வழக்கம். இந்த தூர்வாரும் பணிகள் சாகுபடிக்கு முன்பாக மே மாதத்துக்குள் நடந்து முடிந்துவிடும்.

தூர்வார தேவையான நிதியை இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அடுத்து வரும் அரசு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்து, அதில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்குவதற்குள் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

எனவே தூர்வாரும் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று நிதி ஒதுக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் இப்பணிக்கு விலக்களிக்க வேண்டும். தூர்வாரும் பணியை காலதாமதமின்றி உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.