தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை 10 வாரத்துக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் புலன் விசாரணையை முடித்து அதன் குற்றப்பத்திரிகையை 10 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணிகள் வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடும், ஊழலும் நடந்துள்ளதாக அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதேபோல தி.மு.க.வும் குற்றம்சாட்டி, புகார் செய்தது.

பின்னர் அதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம், தி.மு.க. சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

முகாந்திரம் உள்ளது

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி சீல்' வைக்கப்பட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைக்க போலீஸ் தரப்பில் அனுமதியும் கோரப்பட்டது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை வேண்டும்

இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது வேலுமணி தரப்பில் ஆஜரான வக்கீல், முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் புகாருக்கு முகாந்திரம் இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையின் நகலை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்வகேட் ஜெனரல், போலீஸ் சூப்பிரண்டின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழக்கு ஆவணமாக பயன்படுத்தினால், அதன் நகலை விசாரணை கோர்ட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் தரப்பு பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் அந்த அறிக்கையை வழங்கமுடியாது என்று வாதிட்டார்.

முடித்து வைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை முடித்துவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.