சென்னை,
என்.எல்.சி. நிறுவன பங்குகளை வாங்க த.வெ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் என்.எல்.சி. நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது.
இப்படி லாபகரமாக இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2006-ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, கழக அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டன.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா, “என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு முயன்றால், நானே களத்திற்கு வந்து எனது தலைமையில் பங்கு விற்பனைக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்" என்று எச்சரித்ததன் விளைவாக, அந்த பங்கு விற்பனையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முழுமையாக கைவிட்டது.
தொடர்ந்து, 2013-ம் ஆண்டு SEBI விதிமுறைகளைக் காரணம் காட்டி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது, புரட்சித் தலைவி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3.56% என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் வாங்கி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
இந்நிலையில் மீண்டும் தற்போது மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் என்.எல்.சி.நிறுவனம் அமைக்கப்படும்போது, ஏறக்குறைய 23 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அரசுதான் நிறுவனத்தை நடத்தும் என்ற நம்பிக்கையோடு அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது நிலங்களை வழங்கினார்கள்.
அவர்களது நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், என்.எல்.சி. நிறுவனத்தை தொடர்ந்து அரசுடைமை நிறுவனமாகவே நடைபெறுவதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி செய்யும் என்பதை இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கடந்த காலங்களில் என்.எல்.சி. பங்கு விற்பனைக்கு எதிரான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்போதும் என்.எல்.சி. நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தப் போராடும்.
மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் என்.எல்.சி. ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவை வழங்கும்.
‘ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்'
என்ற குறளைப் பின்பற்றி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டபோது, சுமார் 3.56 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வாங்கியதைப் போல, தற்போதைய த.வெ.க. அரசும், என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
2013-ல் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சி. பங்குகளை வாங்கியதன் மூலம், என்.எல்.சி. பங்குகள் தனியார் வசம் போவது தடுக்கப்பட்டது; தொழிலாளர் நலன் காக்கப்பட்டது மற்றும் தமிழக அரசிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்துள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதல்-அமைச்சரை வற்புறுத்துகிறேன்.
என்.எல்.சி. பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதன்மூலம் என்.எல்.சி. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் காக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களின் எதிர்காலமும் காக்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.