சென்னை,
மரபு ஆடை அணியும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பணியாளர்கள் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பன்மை கலாசாரம், பழக்க வழக்கம் கொண்ட சமூக வாழ்வில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.
நீதித்துறை, மருத்துவம், காவல், தீயணைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சீருடை அணியும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. விழாக் காலங்களில் சீருடை அணியும் பழக்கத்திற்கும் கூட தளர்வு தரும் நடைமுறையும் இருந்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலுவலர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் மரபு ஆடை என்பதை எப்படி புரிந்து கொள்வார்கள் என பல கேள்விகள் எழுகின்றன.
அவசியமற்ற விவாதங்களை உருவாக்கும் மரபு ஆடை அணிய வேண்டும் என்ற அரசாணை வெளியிடும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.