தமிழக செய்திகள்

‘100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை த.வெ.க. அரசு பிரதிபலித்திருக்கிறது’ - ஜி.கே.வாசன்

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான பேச்சுகளை பேச வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ,

சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், மக்கள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“சட்டமன்றத்தில் ஏனோ தானோ என்று கேள்விகள் கேட்காமல் ஆக்கப்பூர்வமான முறையில் கேள்விகள் கேட்பதையே மக்கள் விரும்புகிறார்கள். சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகிறது என்றால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புணர்வு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசும் பேச்சுகள் மக்கள் சார்ந்த பேச்சுகளாக, தங்கள் தொகுதி திட்டங்கள் சார்ந்த ஆக்கப்பூர்வமான பேச்சுகளாக இருக்க வேண்டுமே தவிர, ஏட்டிக்கு போட்டி பேச்சாகவோ, வெறுப்பு பேச்சாகவோ இருக்கக்கூடாது.

100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை பல விதங்களில் த.வெ.க. அரசு பிரதிபலித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரம், விவசாயிகளின் எண்ணங்களை அரசு முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.