தமிழக செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசு! - நயினார் நாகேந்திரன்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

காலை உணவில் பல்லி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலைச் சிற்றுண்டியில் பல்லி விழுந்ததால், அதை உட்கொண்ட 11 பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

மதிய உணவில் பல்லி

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அரியலூர் மாவட்டம் வெற்றியூர் அரசுப் பள்ளியிலும் இதே போன்று மதிய உணவில் பல்லி விழுந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தச் சம்பவத்தின்போதே மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எச்சரித்திருந்தேன், ஆனால் தவெக அரசு அதனை அலட்சியப்படுத்தியதன் காரணமாகத் தற்போது திருவண்ணாமலையிலும் அந்த தவறு தொடர்ந்திருக்கிறது.

உரிய நடவடிக்கை வேண்டும்

எனவே, பள்ளி மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு உடனடியாகத் தனிக் கவனம் செலுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தைக் கண்காணிக்கத் தகுந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.