சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அரியலூர் மாவட்டம் வெற்றியூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் நேற்று பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மழலைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சாப்பாட்டில் புழு, பூச்சிகள் நெளிவதில் தொடங்கி சத்துணவுப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது வரை முந்தைய திமுக ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு கொடூரங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியிலும் அவை தலைதூக்குவது ஏற்புடையதல்ல. அதிலும் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தொடங்கிய இரு நாட்களுக்குள்ளாகவே நடந்துள்ள இச்சம்பவம் "மாற்றுச் சக்தி"-யின் நிர்வாகத்திறனை சந்தேகம் கொள்ளச் செய்கிறது.
நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் நேராத நிலையில், இந்தத் துர்சம்பவத்தை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு தவெக அரசு இனி விழிப்புடன் செயலாற்ற வேண்டும்! அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய குழந்தைகளின் பசியைப் போக்கும் மதிய உணவில் எந்த ஒரு தரக்குறைவும் நேராமல் இருப்பதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.