தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரத்தில் தவெக அரசு வாய் திறக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரத்தில் தவெக அரசு வாய் திறக்க வேண்டும்!

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றும் விதமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அசல் பட்டியலைத் தவிர்த்து, வருவாய் குறைந்த மற்றும் பார் வசதி இல்லாத கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தவெக அரசு மூடி வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

விளம்பரம் தேடும் சதியே..

"மாற்று சக்தி" என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த பின்பும், தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு (MRP-க்கு மேல்) மது விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தடைசெய்யப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள கடைகளை முழுமையாக மூடாமல் அதே பகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்வதாகவும், பார் வசதி இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மட்டுமே மூடுவதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது நிச்சயமாக மக்களை ஏமாற்றி விளம்பரம் தேடும் சதியே ஆகும்.

கள நிலவரம் முற்றிலும் வேறு

பிரசாரக் கூட்டங்களில் "வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது" என்று முழங்குவது எளிது; ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. எனவே, மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகளின் முழு விவரங்கள் மற்றும் இருப்பிடங்கள் அடங்கிய விவரங்களை, ஏற்கனவே நாம் கோரியதைப் போல் ஒரு வெள்ளை அறிக்கையாக தமிழக முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.