மதுரை,
ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் சமூக சீர்கேடுகள் மாறவில்லை என்று த.வெ.க. பற்றி பொதுமக்கள் விமர்சிப்பது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது:
கடந்த ஆட்சியில் நடந்தது; இப்போதும் அதன் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் 6 மாதமாவது ஒரு அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், எல்லா இடங்களில் போதை கலாச்சாரம் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அதை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது.
த.வெ.க. அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். காவல்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என பல்வேறு துறையினரின் மாற்றங்கள் எல்லாம் கடந்த சில வாரங்களாகவே நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை என்பதை சென்னை, திருச்சி, மதுரையில் தொடங்கியுள்ளனர். இதுபோல தமிழகம் முழுவதும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இதற்கு குறைந்தது 6 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
மின்சாரத்துறையில் தட்டுப்பாடு உள்ளது. ஆங்காங்கே மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு உரிய தீர்வை விரைந்து காண வேண்டும். மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு காரணம் உற்பத்தி பற்றாக்குறையா, மின்பகிர்வா அல்லது மின்பராமரிப்பா என்பதை ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.