தமிழக செய்திகள்

தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்ட கூடாது - நயினார் நாகேந்திரன்

தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் முதல்-அமைச்சர் பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனதுஎக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் உங்கள் நிதியமைச்சர் மரிய வில்சன் வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்திருந்த நிலையில், தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் முதல்-அமைச்சர் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கடனை காரணம் காட்டி கொடுத்த வாக்குறுதிகளை கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ என தோன்றுகிறது.

கடன் சுமை

காரணம், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையை கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல, நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதை புதிதாக கண்டுபிடித்து விடவில்லை. பல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரசாரத்தின் போது, இதே பொருளாதார கடனை சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்தவர் தானே நீங்கள்?

தேர்தல் வாக்குறுதிகள்

தமிழகம் கடன் சுமையில் தவிக்கிறது என்று தெரிந்தும் கூட, முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாக கொண்டு திருமணத்திற்கு ஒரு பவுன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாதம் ரூ. 2500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ. 4000 நிதியுதவி, பயிர்க்கடன் முழுவதுமான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளை எதற்கு வாரி இறைத்தீர்கள்? மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள்?

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் முதல்-அமைச்சரே, திமுக விட்டுச் சென்ற கடனை காரணம் காட்டி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை தமிழக பாஜக வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.