சென்னை,
அரசு ஆசிரியர்கள் மீது தவெக அரசு கூடுதல் பணிச்சுமையை ஏற்றக் கூடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தை இருவேளையும் கண்காணிக்க, பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியரையே "கண்காணிப்பு ஆசிரியராக" நியமிக்க வேண்டும் என்ற தவெக அரசின் உத்தரவு, கொஞ்சம் கூட ஏற்புடையதன்று.
தமிழகம் முழுவதிலும் உள்ள 40 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுமட்டுமன்றி, தமிழகத்தில் 3,957 அரசு பள்ளிகள் ஓராசிரியரை மட்டுமே கொண்டு இயங்கி வருவதாக, 2025-26 கல்வி ஆண்டின் UDISE+ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இப்படி அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால், அரசு ஆசிரியர்கள் ஏற்கனவே கூடுதல் பணிச்சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், காலை மற்றும் மதிய உணவுகளை தரம் பரிசோதிக்கும் பணியையும் அவர்கள் மீதே சுமத்தினால், எப்படி சமாளிப்பார்கள்?
"Breathing Space" இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசு ஆசிரியர்கள் என்ன "Machine"களா? கூடுதல் பணிச்சுமையால் மனச்சோர்வடையும் ஆசிரியர்கள், மாணவர்களை எப்படி கவனமாக கையாள்வார்கள்?
எனவே, செயல்முறை சிக்கல்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவு திட்டத்தை 8 ஆக விரிவாக்கம் செய்த முதல்-அமைச்சர் விஜய், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையை சுமத்துவதை விட்டு விட்டு, அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
அதுமட்டுமன்றி காலை மற்றும் மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க வெவ்வேறு ஆசிரியர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.