சென்னை,
தவெக அரசு மீது அடுத்தடுத்து லஞ்சப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்
இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தென்காசி மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் என்பவர், திருவாரூரில் பணிபுரியும் அரசு செவிலியர் ஒருவரின் இடமாறுதலுக்காக ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக வெளியாகியுள்ள ஆடியோ விவகாரம் குறித்த செய்தி ஒருபுறம்; மறுபுறம், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக தன்னிடம் ரூ.5 கோடி வரை லஞ்சம் கொடுக்கப் பேரம் பேசப்பட்டதாகவும், இது லயோலா மணிக்கு தெரியும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருப்பதும் என, அடுத்தடுத்து வெளிவரும் இந்தப் புகார்கள் தமிழக அரசியலில் தூய சக்தி எனக் கூறிக் கொள்ளும் ரீல்ஸ் தவெக ஆட்சியின் ஊழல் முகத்திரையைக் கிழித்திருக்கிறது.
“வெறும் காத்துய்யா...அதுலயே ஊழல் பண்ணின தேசம் இது” என்று திரைப்படங்களில் ஊழலுக்கு எதிராகவும், முதல்-அமைச்சரான பின்பு சுதந்திர தின உரையில் தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் என்றும் பஞ்ச் வசனம் பேசிய முதல்-அமைச்சர் விஜய் தனது கட்சிக்குள்ளும், பொதுவெளியிலும் லஞ்சப் புகார்கள் தலைவிரித்தாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.
தன்னிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பேரம் பேசப்பட்டதாகக் கூறும் அமைச்சர் ராஜ்மோகன், அந்த நபர் யார், யாருடைய பெயரில் இந்தப் பேரம் பேசப்பட்டது, எப்போது பேசப்பட்டது, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய புகார் அளித்து, ஆதாரங்களை விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைத்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து மேடைகள் தோறும் ஊழலை ஒழிப்போம் முழங்கிவிட்டு, ஊழல் புகார்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே வந்து நிற்கும்போது மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. இப்போது சொல்லுங்கள் இது தூய சக்தியா? தீய சக்தியா?.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.