தமிழக செய்திகள்

த.வெ.க. தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும் - துரை வைகோ

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது.

சென்னை,

மதிமுக எம்.பி. துரை வைகோ தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம். ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம்.

ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை வழங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் இது போன்ற ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற மரபை கருத்தில் கொண்டு தமிழ்நாடு கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்த போது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இரண்டும் சேர்த்து 116 இடங்களைப் பெற்றிருந்தன. ஆனால் அப்போதைய கர்நாடகா கவர்னர் வாஜூபாய் ரூடாபாய் வாலா, 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை தனிப் பெரும் கட்சியாக அங்கீகரித்து கட்சியின் தலைவர் பி.எஸ். எடியூரப்பா அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

அதே நிலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது; மேலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.