தமிழக செய்திகள்

மீண்டும் எதிரொலித்த வேப்பனஹள்ளி பார்முலா!

வேப்பனஹள்ளி தொகுதியில் ஜெயிக்கும் கட்சி ஆட்சியை இழக்கும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி, தமிழக அரசியலில் ஒரு தனித்துவமான மற்றும் விசித்திரமான தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, வேப்பனஹள்ளி தொகுதியில் ஜெயிக்கும் கட்சி ஆட்சியை இழக்கும் (அதாவது, ஆளுங்கட்சியாக வரமுடியாது) என்ற நம்பிக்கை, 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அதாவது, 2011-ல் வேப்பனஹள்ளி தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து, அந்த தொகுதியில் எந்தக்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்தக் கட்சி ஆட்சி அமைத்ததில்லை. கடந்த (2021) சட்டசபை தேர்தலில், வேப்பனஹள்ளி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றாலும், தி.மு.க. தான் ஆட்சி அமைத்தது.

தற்போதைய தேர்தலில், தி.மு.க. சார்பில் பி.எஸ்.சீனிவாசன், அ.தி.மு.க. சார்பில் மீண்டும் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.ஆர்.சம்பங்கி ஆகியோர் களம் கண்டபோதும், தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.சீனிவாசன் வெற்றி பெற்றார். ஆனால், தி.மு.க.வால் ஆட்சி அரியணை ஏற முடியவில்லை. மொத்தத்தில் வேப்பனஹள்ளி பார்முலா மீண்டும் எதிரொலித்து இருக்கிறது.