விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஒரு சுனாமி போன்றது, ஒரு புயல் போன்றது. இது நிலையானது அல்ல, ஆடி அடங்கிவிடும். நிதானமாக நாம் எழுந்து நின்றால் நிச்சயமாக நிரந்தரமான வெற்றியை நம்மால் பெற முடியும்.
நாம் அதிகாரத்திலேயே இருந்தால் மட்டும்தான் கட்சியை நடத்த முடியும் என்று எதுவும் கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய தெம்பு உள்ளவர்கள் நாம். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் ஓய்ந்து விட வேண்டாம். பலம் கொண்ட மதயானைக்கு ஒப்பான தி.மு.க.வையே எதிர்த்து களம் கண்டவர்கள் நாம்.
ஒரு ஸ்டார் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தவுடன், மக்கள் அவருக்கு வாக்குகளை அளித்திருக்கிறார்கள். யார் வேட்பாளர் என்றே தெரியாமல் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் என்ன சாதிக்க முடியும்?
அ.தி.மு.க.வில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் உள்ளாட்சியில் பதவியில் இருந்து அனுபவம் பெற்றவர்கள். ஒரு நிர்வாகத்தை எப்படி நடத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நமக்கு தெரியும். அ.தி.மு.க. நிர்வாகிகள் மக்களின் மனம் அறிந்து செயல்படக் கூடியவர்கள். இதில் நமக்கு அடுத்து இருப்பவர்கள் தி.மு.க. நிர்வாகிகள்.
அ.தி.மு.க.வை அவ்வளவு எளிதில் மக்கள் கைவிட மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன். இது மிகப்பெரிய ஒரு சிக்கல்தான். தி.மு.க.வின் வாக்குகள் அவர்களுக்கு அப்படியே விழுந்திருக்கின்றன. அதே சமயம், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வாக்குகள்தான் த.வெ.க.வுக்கு சென்றுவிட்டன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.