சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் நிதிநிலை குறித்து "வெள்ளை அறிக்கை" வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது.
தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
தவெக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன?
வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன?
மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?
இப்படி செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் "it will take some time" தான்.
வருவாயைப் பெருக்குவதற்கான புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், அரசுத் துறைகளில் உள்ள leakage-களைத் தடுக்க வேண்டும் என்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தும் பாதையை தவெக அரசு தேர்வு செய்துள்ளதோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வெள்ளை அறிக்கை என்பது பிரச்சினைகளைப் பட்டியலிடுவதோடு நிற்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும், காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெளிவான தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையூட்டும் செயல்திட்டங்களும் இல்லை; காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லை.
எனவே, தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன உண்மைகளையே புதிய அட்டையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.