திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் காதல் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் விஷம் குடித்து உயிரிழந்தனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரைப் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (22) என்பவரை காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10-ந்தேதி யுவராஜ் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா, கணவரை கண்டித்துள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மது போதையில் இருந்த யுவராஜ், தனது தந்தை பாஸ்கர் மற்றும் மனைவி மஞ்சுளா ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுளா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த யுவராஜும் தானும் அதே விஷத்தை குடித்து இருவரும் மயங்கி விழுந்தனர். உடனே யுவராஜின் தாயார், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த யுவராஜும் மஞ்சுளாவும் சிகிச்சை பலனின்றி நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டுகளே ஆன நிலையில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.