தமிழக செய்திகள்

பாம்பன் பழைய தூக்குப்பாலத்தை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது

இன்னும் 1 மாதத்திற்குள் மீதமுள்ள தூக்குப்பாலத்தை அகற்றும் பணிகள் முடிவடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமேசுவரம்,

பாம்பன் கடலுக்குள் அமைந்துள்ள பழைய ரெயில் பாலம் 110 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாகியதால் அதன் அருகே சுமார் ரூ.450 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பழைய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை அகற்றும் பணியானது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கியது. இந்த பணி கடந்த 9 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக அகற்றப்பட்டு தற்போது மற்றொரு பகுதி அகற்றும் பணியானது கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இதற்காக ரெயில் பாலத்தில் ராட்சத கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் தூக்குப்பாலத்தின் இரும்பு கம்பிகளின் மீது அமர்ந்து வெல்டிங் செய்து இரும்பு தகடுகளை அகற்றி வருகின்றனர். இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 1 மாதத்திற்குள் மீதமுள்ள தூக்குப்பாலத்தை அகற்றும் பணிகள் முடிவடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக பழைய ரெயில் பாலத்தில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் இரும்பு கர்டர்கள் டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் அகற்றும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT