திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மாங்காவு பகுதியில் அரசு விரைவு பஸ்சில் பெண் ஒருவர் பயணித்தார். தொடர்ந்து அந்த பெண். கண்டக்டரிடம் மாங்காவு அருகே உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்துமாறு கூறினார். ஆனால், அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் கண்டக்டர் நிறுத்த மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர் வற்புறுத்தி யும் கண்டக்டர் அங்கு பஸ்சை நிறுத்த மறுத்துவிட்டார்.
இதையடுத்து பெண் டிரைவர் அருகே சென்று அவரிடம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தான் இறங்க பஸ்சை நிறுத்துமாறு பலமுறை கூறினார். ஆனால் அவரும் அங்கு பஸ் நிறுத்தம் இல்லை எனக்கூறி நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திர மடைந்த அந்த பெண், கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
தொடர்ந்து பஸ்சில் அவசரகால பெட்டியில் இருந்த சுத்தியலை திடீரென எடுத்து டிரைவர் இருக்கையின் இடதுபுறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இதனை பார்த்து டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுபற்றி நெடுமங்காடு பகுதியில் உள்ள அரசு பஸ் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உடனே கசபா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த கசபா போலீசார். சுத்தியலால் உடைக்கப்பட்ட பஸ் ஜன்னல் கண்ணாடியை பார்வை யிட்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெண் கூறுகையில், ஆத்திரத்தை கூட அடக்கலாம்..ஆனால் இயற்கை உபாதையை அடக்கமுடியாது தாம் கழிவறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் தான் பஸ்சை நிறுத்துமாறு கேட்டதாகவும், அதற்கு கண்டக்டர், டிரைவர் மறுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்தார்.
மேலும் அதற்கு மன்னிப்பு கேட்டதுடன், சேதமடைந்த கண்ணாடிக்கான தொகையை செலுத்த தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து பெண்ணிடம் இருந்து போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28 ஆயிரம் நஷ்டஈடு தொகையாக பெறப்பட்டதுடன், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இதனை பஸ்சில் இருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.