சேலம்,
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இதில் மூத்த மகன் திருமணமானவர். அவர் மட்டும் கடலூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கூலித்தொழிலாளியான இளைய மகனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் தாயுடன் வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் கூலித்தொழிலாளி, தனது அண்ணி வீட்டில், அவர் குழந்தைகளுடன் தனியாக இருந்த நேரங்களில் அங்கு சென்று அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து, தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் அண்ணனின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும், பணம் கேட்டும் தகராறு செய்தார்.
அப்போது அங்கு அண்ணியின் தம்பியான 28 வயதுடைய வாலிபர் வந்தார். அவர் கூலித்தொழிலாளியிடம் நீ ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? எனக்கூறி தொழிலாளியுடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, நீ உயிருடன் இருக்கும் வரை எனது அக்காள் வாழ்க்கையில் பிரச்சினை தான்? நீ செத்தால் தான் அவள் நிம்மதியாக வாழ முடியும் என்றுக்கூறி கூலித்தொழிலாளியை சுவரில் தள்ளி தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கூலித்தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூலித்தொழிலாளியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். அக்காளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை தம்பி அடித்துக்கொலை செய்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.