தமிழக செய்திகள்

தேனி: யானை தந்தங்களைக் கார்களில் கடத்திய 4 பேர் கைது!

கேரளத்தை நோக்கிச் சென்ற இரண்டு கார்களை வனத்துறையினர் கம்பம் புறவழிச் சாலையில் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் யானை தந்தங்களைக் கார்களில் கடத்திச் சென்றதாக நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு யானை தந்தங்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வனத்துறையினருக்கு ரகசிய தகவல்

தேனி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுதல், யானை தந்தங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட வன உயிரினக் குற்றங்கள் மறைமுகமாக நடைபெறுவதாக, மதுரை மண்டல வனம் மற்றும் வன உயிரினக் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கம்பம் புறவழிச் சாலையில் சோதனை

கம்பம் மேற்கு வனச்சரகர் தீனதயாளன் தலைமையிலான வனத்துறையினர், கேரளத்தை நோக்கிச் சென்ற இரண்டு கார்களை கம்பம் புறவழிச் சாலையில் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.

அப்போது, அந்தக் கார்களில் நான்கு யானை தந்தங்கள் மறைத்து எடுத்துச் செல்லப்படுவது கண்டறியப்பட்டது. அவற்றைக் கேரளத்திற்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

நான்கு பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை எடை கொண்டவை என்றும், அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை தந்தங்களைக் கடத்தியதாகக் கம்பம் முத்துராமலிங்கத்தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த விஜயன் (42), மதுரை கூடல்நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த வாசுதேவன் (52) ஆகிய நால்வரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணை

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும், நான்கு யானை தந்தங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரிடமும் கம்பம் மேற்கு வனச்சரகர் தீனதயாளன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT